மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் 3,653 வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீடுகளின் மேற்கூரையில் சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் இத்திட்டத்திற்கு தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து மானியம் வழங்கி வருகின்றன. தகுதியுள்ள வீடுகளில் 3 கிலோவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் அமைப்பை நிறுவினால், மத்திய அரசின் ரூ.78,000 மானியத்துடன் தமிழக அரசின் ரூ.22,000 கூடுதல் மானியமும் சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும்.
ஒரு கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு மத்திய அரசு ரூ.30,000, தமிழக அரசு ரூ.5,000 என மொத்தம் ரூ.35,000 மானியம் வழங்கப்படுகிறது. இரண்டு கிலோவாட் அமைப்புக்கு மத்திய அரசு ரூ.60,000, தமிழக அரசு ரூ.10,000 என மொத்தம் ரூ.70,000 கிடைக்கும். மூன்று கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு மொத்த மானிய உச்சவரம்பு ரூ.1 லட்சமாகும். சூரியசக்தி மின் அமைப்புகளை நிறுவுவதில் பொதுமக்களுக்கு ஆரம்ப முதலீடு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. மூன்று கிலோவாட் திறன் கொண்ட அமைப்பை நிறுவ சுமார் ரூ.2 லட்சம் வரை செலவாகலாம். மானியம் கிடைத்தாலும், மீதமுள்ள தொகையைப் பயனாளிகள் செலுத்த வேண்டியிருக்கும்.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "தமிழக அளவில் ஒரு லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் அமைப்புகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாவட்டத்தில் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் 3,653 வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1,020 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு முன்பு மாதந்தோறும் சராசரியாக 200 விண்ணப்பங்கள் மட்டுமே வந்த நிலையில், தற்போது விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை 183 வீடுகளில் மட்டுமே சூரியசக்தி மின் இணைப்புகள் நிறுவப்பட்டுள்ளன" என தெரிவித்தனர்.